ஏற்காடு மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 6 பேர் பலி!

 

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து, மலைப்பாதையின் 11-வது கொண்டு ஊசி வளைவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

10-வது கொண்டை ஊசி வளைவு அருகே விழுந்து கிடந்த பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாட்டுகளில் சிக்கி கூச்சலிட்டனர். அந்த வழியே சென்றவர்கள், ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பலத்த காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.