முன்விரோத பகை.. இளைஞர் கத்தியால் குத்திக் கொலை.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்

 

ஈரோடு அருகே முன்விரோத பகை காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே உள்ள முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட பொறியாளர் ஹரிஸ் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏசி மெக்கானிக் வெள்ளிங்கிரி. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஹரிஸ் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளார்.

அப்போது வழியில் வெள்ளிங்கிரிக்கும், ஹரிஸுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளிங்கிரி தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஹரிஸை கத்தியால் அவரது கழுத்துப் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த ஹரிஸை அவரது நண்பர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார். அங்கு ஹரிஸை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக பூசாரி (எ) கனகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான வெள்ளிங்கிரி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை பிணவறை முன்பு கூடிய ஹரிஸின் உறவினர்கள் மற்றும் மலையம்பாளையம் பகுதி மக்கள், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியிலும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகர போலீசார் ஏராளமானோர் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சமரசம் செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.