பொங்கல் டபுள் கொண்டாட்டம்.. முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகையை அட்வான்சாக கொடுத்த தமிழ்நாடு அரசு!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 முன்கூட்டியே பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். அந்த தொகை மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வரபெற்றுள்ளதால், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பண்டிகை அல்லது வார விடுமுறை காலத்தில் முன்கூட்டியே உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போதும் ஏழை எளிய மக்கள் தீபாவளிக்காக செலவு செய்வதற்கு முன் கூட்டியே மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்க உள்ள நிலையில், கூடுதல் மகிழ்ச்சி தரும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் முன்னதாக இன்றே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.