பள்ளி மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ.. சேலத்தில் சைக்கிள் வழங்கும் விழாவில் சலசலப்பு!

 

ஓமலூர் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமக எம்.எல்.ஏ. அருள், மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பாமக அருள் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் சேலம் பாகல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொகுதியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் எம்எல்ஏ அருள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

மேலும் விழாவில் திமுகவினரும் பங்கு பெற்றிருந்தனர். இந்நிலையில், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை எம்எல்ஏ அருள் வழங்குவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மிதிவண்டிகளை நாங்கள் தான் மாணவர்களுக்கு வழங்குவோம் என திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

பின்னர் சட்டமன்ற உறுப்பினரே மாணவர்களுக்கு மிதிவண்டியை வழங்கினார். அப்போது பேசிக் கொண்டிருக்கும் போதே எம்.எல்.ஏ அருள் மாணவர்களின் காலில் விழுந்தார். அவர் கூறுகையில், “நல்ல கருத்துக்களை சொல்லவேண்டிய இடத்தில் அநாகரிகமாக செயல்பாட்டுக்கு உள்ளாகிவிட்டோம். கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நல்ல ஒழுக்கத்தை கத்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் அசிங்கப்படுத்திவிட்டார்கள். உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.