ரிசல்ட் பார்க்கும் முன்னரே உயிரை மாய்த்த ப்ளஸ் 2 மாணவன்... திருவண்ணாமலை அருகே சோகம்!!

 

தண்டராம்பட்டு அருகே தேர்வின் தோல்வி பயத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜாமணி. விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவரது மகன் ஹரி (18) தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்த இவர் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஹரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வீடு திரும்பிய அவரது தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு அழுது துடித்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டராம்பட்டு போலீசார், மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஹரி தோல்வி அடைந்திருந்தார். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மாணவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை உள்ளிட்ட விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.