பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த ப்ளஸ்-2 மாணவி.. குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விபரீத முடிவு!

 

கரூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகள் கார்த்திகா (17). இவர் கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி கார்த்திகா, மதிய இடைவேளையில் மதிப்பெண் பேப்பரை வாங்கிச் செல்வதற்காக முதல் மாடியில் உள்ள ஆசிரியரை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பேப்பரில் அவர் குறைவான மதிப்பெண்கள் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவி திடீரென முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனைக் கண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து, உடனே மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவிக்கு கால், கை மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர போலீசார், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரையாண்டு தேர்வுகளில், மாணவி கார்த்திகா குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்ததால், சக மாணவிகள் அவரிடம் பழகாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், விரக்தியில் இருந்த அவர் திடீரென மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பள்ளி மாணவிகளிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.