கடலூரில் ப்ளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு

 

ப்ளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா (17). இவர் பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இதையடுத்து இவர் கடந்த மார்ச் மாதம் நடந்த ப்ளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினார். நேற்று ப்ளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் அபிநயா ஆர்வத்துடன் தேர்வு முடிவை பார்த்தார். 

இதில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அபிநயா மனமுடைந்து காணப்பட்டார். கணித பாடத்தில் 100-க்கு 26 மதிப்பெண் பெற்றிருந்தார். இது தவிர தமிழ்-85, ஆங்கிலம்-41, இயற்பியல்-54, வேதியியல்-72, கணினி அறிவியல்-82 என மொத்தம் 600-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

இதையடுத்து அவரது தந்தை வெளியில் சென்றிருந்தார். தாய் செந்தாமரை முந்திரி தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அபிநயா வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு வந்த பெற்றோர் அபிநயா தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊ.மங்கலம் போலீசார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.