கல்குவாரி குட்டையில் மூழ்கி ப்ளஸ்-1 மாணவர் பலி.. குளிக்க சென்றபோது விபரீதம்!!

 

குஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி பண்டிதகாரனூரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செந்தில். இவரது மகன் தெய்வபிரசாந்த்(17) இவர் குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை தனது நண்பர்களுடன் விளையாட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். மாலை நீண்ட நேரமாகியும் தெய்வபிரசாந்த் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது நண்பர்களிடம் விசாரித்போது பண்டிதகாரனூர் அருகே சங்கியப்பகவுண்டனூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் நேற்று முன்தினம் 4 பேருடன் குளிக்கச்சென்றபோது, தெய்வபிரசாந்த் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கல்குவாரி குட்டையில் தெய்வபிரசாந்தை தேடினர். அந்த குட்டையில் சுமார் 150 அடி வரை தண்ணீர் இருந்தது. மேலும், நேற்று முன்தினம் இரவு மழையும் பெய்து கொண்டிருந்ததுடன், போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடுதல் பணிகளை ெதாடங்கிய தீயணைப்பு படையினர், பிற்பகலில் தெய்வபிரசாந்த் உடலை மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றனர். அதனை தடுத்த மாணவரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன், வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி ஆகியோர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரினர்.

இதையடுத்து உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் உறுதியளித்தது. பின்பலியான மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவன் தந்தை செந்தில் அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.