நெருக்கமாக இருந்த படங்கள்... சமூக வலைதளங்களில் பரப்பிய கள்ளக்காதலி எரித்துக்கொலை..! காங்கயம் அருகே பரபரப்பு

 

காங்கயம் அருகே நெருக்கமாக இருந்த படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் கள்ளக்காதலியை எரித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பினி வரதப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் செந்தில். கட்டிட தொழிலாளியான இவருக்கு பிரேமா (30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரேமா அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். 

அப்போது பிரேமாவுக்கும், ஈரோட்டில் ஒரு ஸ்டுடியோவில் வேலைபார்க்கும் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த விஜய் (26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

கடந்த 27-ம் தேதி வழக்கம்போல் செந்தில் கட்டிட வேலைக்கு சென்று விட்டார். அவரின் 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். பிரேமா மட்டும் வேலைக்கு செல்லாமல் விஜய்யை வரச்சொல்லி அவருக்காக காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது பிரேமாவின் வீட்டிற்கு விஜய் வந்தார். பின்னர் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் திடீரென இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

சிறிது நேரத்தில் வீட்டை விட்டு விஜய் வெளியேறினார். அவர் சென்ற சில நிமிடங்களில் வீட்டிற்குள் இருந்து பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது பிரேமா மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. வலி தாங்காமல் அங்கும் இங்கும் ஓடியுள்ளார். உடனடியாக தீயை அணைத்து பிரேமாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரேமாவுக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரேமா நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேமா உயிரிழக்கும் முன்பு, விஜய் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை பிடித்து விசாரணை நடத்தினர்.

பிரேமாவுடன் விஜய் நெருக்கமாக இருந்த படங்களை பிரேமா சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், பிரேமாவின் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், பிரேமாவின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

ஆனால் விஜய் போலீசாரிடம், நான் மண்ணெண்ணெய் ஊற்றி பிரேமா மீது தீ வைக்கவில்லை என்றும், பிரேமாவே தீக்குளித்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காங்கயம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கயத்தில் கள்ளக்காதலியை உயிருடன் கள்ளக்காதலன் எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.