பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனையா? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோயிலில் ஆய்வு

 

பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகக் கடையில் காலாவதியான பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம். கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதனை வாங்கிச்செல்கின்றனர். உணவு பாதுகாப்பு துறையின் சோதனைக்குப் பிறகு இந்த பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுவதாக பழநி கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஜிஐ டேக் என்ற புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், 15 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில், தயாரிப்பு தேதி இல்லாமல் காலாவதியாகிய பின்னரும் விற்பனை செய்யப்படுவதாக ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை நிர்வாகி செந்தில் குமார் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பழனி முருகன் கோவிலில் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டனர். பிரசாதங்கள் கெட்டுப்போன வாசனை அடிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்து இருந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆய்வுக்காக பிரசாதங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

குறிப்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் இன்று வரை விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாகவும், இதனை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.