தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

 

தமிழ்நாட்டில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நேற்று முன்தினம் (நவ. 27) உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 30) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் திவீரமடைந்து ஒரு சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிககனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.