ஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 30 லட்சம் இழப்பு.. விரக்தியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை!

 

ஆன்லைன் டிரேடிங்கில் 30 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவில் வசித்து வந்தவர் நவநீத கிருஷ்ணன் (42). இவர்  அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, நவநீத கிருஷ்ணன் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு வந்தார். இதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர், நண்பர்கள், உறவினர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி அதை வைத்தும் ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளார். அதிலும் நஷ்டம் ஏற்படவே பணத்தை இழந்து கடனாளியானதால் விரக்தி அடைந்துள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் விரக்தியடைந்த நவநீதி கிருஷ்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறங்கிய பிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார், விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட நவநீத கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நவநீத கிருஷ்ணன் எழுதி வைத்த உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். 

அந்த கடிதத்தில், “ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சம் வரை இழந்து கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக” எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.