பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம பலி.. திட்டக்குடி அருகே பரபரப்பு

 

திட்டக்குடி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சக்திவேல், அந்தமான் தீவில் வேலை பார்த்து வரும் நிலையில், நந்தினி தற்போது கொடிக்களம் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வீட்டுக்கு முன்பு முற்றத்தில் படுக்க வைத்து வீட்டு பின்புறமுள்ள பாத்ரூமுக்கு சென்ற நந்தினி, மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தையின் அருகே இரண்டு நாய்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், நாயை விரட்டி விட்டு குழந்தையை தூக்கிப் பார்த்துள்ளார். அப்போது குழந்தை மூச்சின்றி இருந்ததால் உடனே பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவசரம் அவசரமாக இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆவினன்குடி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தையை நாய் கடித்ததற்கான பெரிய காயங்கள் உடலில் இல்லை. மாறாக குழந்தையின் கழுத்தில் இருந்த கயிறு இறுக்கியவாரு இருந்தது பல சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து குழந்தை நாய் கடித்து இறந்ததா? அல்லது கழுத்து இறுக்கபட்டு இறந்ததா? என பல்வேறு கோணத்தில் ஆவினன்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.