தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி.. உயிர்பலி வாங்கிய புதிய வீடு!

 

திருப்பத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் அடுத்த ராஜகவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி அசின். இந்த தம்பதிக்கு அஷ்வந்த் (3) மற்றும் ஒன்றரை வயதில் ரிஷிவந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதி இருவரும் தாங்கள் வசித்து வந்த வீட்டின் பக்கத்திலேயே புதிதாக வீடு கட்டி வருக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று மூத்த மகன் அஸ்வந்த்தை அசின் பள்ளிக்கூடம் அழைத்து சென்றிருந்த நிலையில், இளைய மகன் ரிஸ்வந்துடன் ஞானசேகர் புது வீட்டின் கட்டட பணிகளை கவனித்து வந்திருக்கிறார். அப்போது தனியாக இருந்த ஒன்றரை வயது சிறுவன் ரிஷிவந்த், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். 

பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் தேடியும் குழந்தையை காணாததால் தண்ணீர் தொட்டிக்குள் புகுந்து பார்த்தபோது ரிஷிவந்த் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து திருப்பத்தூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் ரூரல் போலீசார், ரிஷிவந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.