பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. தாயின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!

 

பண்ருட்டி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் சௌந்தர் (42). முந்திரி வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (36). இந்த தம்பதிக்கு நவீன்குமார் (5), ரக்க்ஷன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் நவீன்குமார் காடாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான். இவன் தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருகிறான்.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் நவீன்குமாரை அழைத்து செல்வதற்காக வீட்டின் அருகில் பள்ளி வேன் வந்து நின்றது. அப்போது தனது 2 குழந்தைகளையும் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியில் வந்த வசந்தி நவீன்குமாரை வேனில் ஏற்றி விட்டார். அந்த சமயம் சிறுவன் ரக்க்ஷன் வேனுக்கு அடியில் புகுந்துவிட்டான். இதை வசந்தியும், வேன் ஓட்டுநரும் கவனிக்கவில்லை.

இதனால் வேன் புறப்பட்டதும் அதற்கு அடியில் புகுந்த ரக்க்ஷனின் தலை மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். தன் கண் எதிரே குழந்தை துடிதுடித்து இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வசந்தி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ரக்ஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் கண் எதிரே வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை தலை நசுங்கி பலியான சம்பவம் அக்கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.