நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை.. தாய் திட்டியதால் நிகழ்ந்த சோகம்

 

செல்போனை வெகுநேரமாக பார்த்ததை தாயார் கண்டித்ததால் நர்சிங் மாணவி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஒரு மகனும், அக்ஷயா (19) என்ற மகளும் இருந்தனர். மகன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். மகள் அக்ஷயா திடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அக்ஷயா தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம்.

இவர் வீட்டில் செல்போனை எப்போதும் பார்த்தபடி அதிலேயே மூழ்கி கிடந்ததாக தெரிகிறது. இதனை கவனித்த தாயார் நிர்மலா, அவருக்கு அறிவுரை கூறி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் அக்ஷயா வீட்டில் இருந்தபோது வெகுநேரமாக செல்போன் பார்த்ததை நிர்மலா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அக்ஷயா வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று திடீரென விஷம் குடித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு சென்று பார்த்த நிர்மலா அதிர்ச்சி அடைந்தார். அங்கு அக்ஷயா மயங்கிய நிலையில் கிடந்தபடி உயிருக்கு போராடினார். பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை வெகுநேரமாக பார்த்ததை தாயார் கண்டித்ததால் நர்சிங் மாணவி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.