பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர் 4-வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வந்தவர் பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ. 10) காலை வீட்டில் குளியலறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், சொர்ண ரேகை, அத்திப்பூக்கள் போன்ற டிவி தொடர்கள் நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தர்ராஜன் பணியாற்றியுள்ளார். இவருடைய மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்களை எழுதியுள்ளார். இன்றைய தினம் நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த அதிர்ச்சியிலிருந்த மீள்வதற்குள் இந்திராசௌந்தர்ராஜனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 700 சிறுகதைகள், 340 நாவல்களையும் எழுதிய இந்திரா சௌந்தரராஜன், 105 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இவருடைய பல கதைகள் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டிருந்தன. இவர் எழுதிய என் பெயர் ரங்கநாயகி எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் 3வது பரிசு பெற்றது. சிருங்காரம் என்ற படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. ருத்ரம் தொலைக்காட்சித் தொடருக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார்.
இந்திரா செளந்தர்ராஜனின் மறைவு குடும்பத்தினர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்திரா செளந்தர்ராஜனின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.