மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையே இவர் தேவாங்கர் கல்லூரியில் படித்து வந்த ஏழை மாணவிகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அப்பகுதியின் முக்கிய பிரமுகர்களுக்கு அந்த மாணவிகளை அழைத்துச் செல்வதே அவரது நோக்கமாக இருந்துள்ளது.

அப்படி தான் மாணவி ஒருவரிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோ பகீர் கிளப்பி இருந்தது. அந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். கடந்த 2018-ல் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே இப்படி நடந்து கொள்வாரா எனத் தமிழ்நாடே கொந்தளித்தது. இந்த வழக்கில் நிர்மலா தேவியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நிர்மலா தேவி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது தண்டனை விவரங்கள் நேற்று மதியம் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சிறையில் இருந்த காலங்களை தவிர்த்து மீதி நாட்கள் சிறையில் இருப்பார் என நீதிபதி தெரிவித்துள்ளார். நேற்று காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்து குறிப்பிடத்தக்கது.