அடுத்தடுத்த அதிர்ச்சி! சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. மற்றொரு மாணவர் மருத்துவமனையில் அனுமதி.!

 

சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவன் சன்னி. இவர், சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி 2-ம் ஆண்டு பயின்று வந்தார். அவர் நேற்று மாலை 4 மணியளவில் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்தது குறித்து சக மாணவர்கள் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் ஸ்ரீவன் சன்னி, மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் தற்கொலைக்கான முழுமையாக காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல மற்றொரு மாணவரும் தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2016-ல் தொடங்கி தற்போது வரை 12 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016-ம் ஆண்டு மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 3 பேர் மாணவர்கள். சென்னை ஐஐடியில் கடந்த 2021-ம் ஆண்டு பாதி எரிந்த நிலையில் ஒரு மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

இதே போன்று கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவர், வருகை பதிவேட்டில் பற்றாக்குறை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும் ஒரு ஆய்வு மாணவர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதுகலை தொழில்நுட்ப மாணவர் ஆகியோர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2019-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஒடிசா மாணவர் தற்கொலை நடந்துள்ளது. 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் தற்கொலைகள் நிகழ்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.