டிசம்பர் 10-ல் சென்னைக்கு அடுத்த புயலா..? விளக்கம் அளித்த வெதர்மேன்!
சென்னையை நோக்கி டிசம்பர் 10-ம் தேதி புயல் வரும் என்ற வதந்தி அடிப்படை ஆதாரமற்றது வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4-ம் தேதி தமிழ்நாட்டை தாக்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதிகனமழை பெய்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் இதுவரை முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் மேலும் ஒரு புயல் வரும் என்ற வதந்தி பரவி வருகிறது. இது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வெதன்மேன் பிரதீப் ஜான் இந்த வதந்தி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், இது அடிப்படை ஆதாரமற்றது எனவும் இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும், டிசம்பர் 10-ம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் எனவும், அது இந்திய கடற்கரையை விட்டு நகரும் என்றும் கூறியுள்ளார். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது எனவும் வெதன்மேன் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.