கணவன் கண்ணெதிரே புதுமணப்பெண் துடித்துடி பலி.. படுகாயங்களுடன் கதறி அழுத கணவர்!

 

கூடுவாஞ்சேரி அருகே அரசு விரைவுப் பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரது மகன் ஹரிதாஸ் (24).  இவரது மனைவி சந்தியா (20). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் சென்னை மாதவரம் காவாங்கரை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்னை மாதவரத்தில் இருந்து திண்டிவனம் சென்றனர். பின்னர் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி 3 பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த அரசு விரைவுப் பேருந்து சாலையில் விழுந்த சந்தியா மீது ஏறி இறங்கியதில் கணவர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே சந்தியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் ஹரிதாசும், அய்யனாரப்பன் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிதாஸ், அய்யனாரப்பன் ஆகியோர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.