வந்தே பாரத் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. ரயிலின் 9 பெட்டிகள் சேதம்.. அதிர்ந்த பயணிகள்!

 

சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை - கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை - நெல்லை மற்றும் கோவை - பெங்களூர் என என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும்.

அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் பயணம் செய்ய பலரும் விருப்பபடுவதால் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயிலான சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சேவையை தொடங்கியது.

இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 10.40 மணிக்கு வந்து சேரும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 6 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் இரவு 10 மணிக்கு மேல் கங்கைகொண்டன் அருகே செல்லும் போது மா்மநபா்கள் வந்தே பாரத் விரைவு ரயிலின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதனால், ரயிலின் 9 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.