திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு

 

ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு நர்மதா மற்றும் மீனா என்ற இரண்டு மகள் இருந்தனர். கணவர் இறந்த பிறகு, சித்ராதேவி ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து தனது இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், மீனாவும் மண்ணாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பரும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை யுவராஜ், மீனாவின் அம்மா சித்ராதேவியை தொடர்பு கொண்டு, மீனாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணபதிபாளையத்தில் உள்ள மருத்துமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். அங்கு சென்று பார்ததபோது மீனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மீனாவை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், மீனாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, உரிய விசாரணை நடத்தி மீனாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் கலைந்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.