மகன் போனார்... மகள் வந்தார்! பாமகவும் டாக்டர் ராமதாஸும் கடந்து வந்த பாதை!!

 

தன்னுடைய வீட்டிலிருந்து யாராவது பாமகவுக்கு வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொல்லித் தான் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்/

வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, கடந்த 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் தொடங்கிய போது, எனக்கு பதவி ஆசை கிடையாது. நானோ, என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தேர்தலில் போட்டியிட மாட்டோம். எந்த பதவிக்கும் வரமாட்டோம் என்று உறுதியளித்தார்.

ஆனால், காலப்போக்கில் தனது மகன் அன்புமணியை தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வந்த ராமதாஸ், கூட்டணி கட்சிகளின் தயவுடன் அவரை ஒன்றிய அமைச்சராக்கி அழகு பார்த்தார். ஒரு கட்டத்தில் அவரை பாமகவின் தலைவராகவும்  ஆக்கினார். மகனும் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று முதலமைச்சர் ஆசையில் புதிய அரசியல் பண்ணிப் பார்த்தார். வட மாவட்டங்களைத் தாண்டி அவராலும் அரசியல் பண்ண முடியவில்லை.

ஆனால், தந்தை மகனுக்கு இடையே விரிசல் உண்டானது.நாளடைவில் கட்சியில் அன்புமணியின் கை ஓங்கி, தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த டாக்டர் ராமதாஸ், அன்புமணியிடம் இருந்து பாமக தலைவர் பதவியை பறித்து, செயல் தலைவராக அறிவித்தார்.

முன்னதாக தன்னுடைய வீட்டைச் சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தனது மருமகள் சவுமியா அன்புமணியை தர்மபுரி தொகுதியில் போட்டியிட வைத்தார். சவுமியா அன்புமணி தோல்வியைத் தழுவினார். சமீபத்தில், தனது விருப்பத்திற்கு மாறாக சவுமியா தேர்தலில் போட்டியிட்டதாகவும் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.

தற்போது அப்பா பாமக மகன் பாமக என இரண்டு பிரிவுகளாகிவிட்டது. மகன் கட்சியைத் தான் தேர்தல் ஆணையம் பாமக என்று அங்கீகரித்துள்ளத். அன்புமணி தொடர்ந்து தனக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், தனது மூத்த மகள் காந்தியை கட்சிக்கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி வந்தார் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில் மகனுக்கு முன்பு வழங்கிய செயல் தலைவர் பதவியை  மூத்த மகள் காந்திக்கு வழங்கியுள்ளார். தன்னையும் கட்சியையும் காந்தி நன்றாகக் கவனித்துக் கொள்வார் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்