தாயார் மரணம்.. இடிந்து போன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!!

 

திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி நேற்று காலை அகால மரணமடைந்தார். உடனடியாக ஓடோடி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ஆறுதல் தெரிவித்து இறுதி வரையிலும் உடன் இருந்தார். முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் மருமகன் சபரீசன் என ஒட்டு மொத்த குடும்பமும் டி.ஆர்.பாலு வீட்டிற்கு உடனடியாக வந்து விட்டனர்.

தாயாரின் மரணம் டி.ஆர்.பாலுவின் மகனும் தொழிற்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜாவை உலுக்கியுள்ளது.  டி.ஆர்.பி ராஜா எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

“இன்று எனது உயிரின் உயிரான தாயின் மறைவு எங்களை இடிபோல தாக்கியபோது, குடும்பத் தலைவராக, கொள்கை நண்பராக என் தந்தையின் கைப்பற்றி நின்று இறுதி நிகழ்வு வரை உடனிருந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கும், அன்புச் சகோதரராக என் தோள் தொட்டு ஆறுதல் அளித்த இளம் தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களுக்கும், எனது அன்புச் சகோதரர் சபரீசன் அவர்களுக்கும், எங்கள் குடும்ப சுக துக்கங்களில் எப்போதும் உடன் இருக்கும் அத்தை அவர்களுக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும்,

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மரியாதைக்குரிய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்,திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழகத்தின் பகுதி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், எங்கள் மண்ணின் மைந்தர்களான மன்னார்குடி கழக நிர்வாகிகள், எனக்கு எப்போதும் பக்க துணையாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், கலைத்துறை உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த பெருமக்கள், கழகம் காக்கும் உடன்பிறப்புகள், அன்பிற்குரிய உறவினர்கள், சமூக வலைதளங்களில் எனக்கு ஆறுதல் கூறியுள்ள நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்