2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை.. கணவர், மாமியாரின் கொடுமையால் விபரீதம்!
ஆம்பூரில் குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் மற்றும் கண்ணனின் தாயார் ஆகியோர் இருவரும் சுதாவிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இரண்டுமே பெண் குழந்தையாக பிறந்ததால் அடிக்கடி அவரது மாமியார் அவரை துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ நாளன்று சுதா வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்ததாக அவரது கணவர் சுதாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் விரைந்து வந்த சுதாவின் உறவினர்கள் சுதாவின் கணவரிடம் தகராறு ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமாபுரம் போலீசார் சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுதாவின் கணவர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோர் சுதாவை துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுகின்றனர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதில் சுதாவின் மூத்த சகோதரி கூறியதாவது, சுதாவிடம் சொத்து கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தாய் வீட்டிற்கு அனுப்பாமல் யாருடனும் எந்த தொடர்பிலும் இல்லாமலும் சுதா இருந்துள்ளார். அவருக்கு இரண்டும் மகள்களாக இருப்பதால் சுதாவை கொடுமை படுத்தியும் வந்துள்ளனர் எனக் கூறினார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாவின் கணவர் மற்றும் மாமனாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.