7 வயது மகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்!
சங்கராபுரம் அருகே கடன் தொல்லையால் தனது 7 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், மூன்றாவது குழந்தை அதிசயா (7) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி அதிசயா (7) தனது தாய் சத்யாவுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், சத்யாவை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, சிறுமியை அருகிலுள்ள விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பூட்டை கிராமத்தில் உள்ள பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றதாகவும், அதனை வருகின்ற அமாவாசை அன்று திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
ஆனால், பணத்தை திரும்பித் தர வருமானம் இல்லாததால் செய்வதறியாது திகைத்த சத்யா, தனது மகளை கொலை செய்துவிட்டால் துக்க நிகழ்வு நடந்த வீட்டில் கடன்காரர்கள் வந்து பணம் கேட்க மாட்டார்கள் என எண்ணி, விவசாயி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடன் தொல்லையால் தாயே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.