காணாமல் போன கல்லூரி மாணவன்.. தோப்பில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

 

ஓசூர் அருகே காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷித் கோட்னாலா (21). இவர் ஓசூர் அருகில் உள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் பயின்று வந்தார். இவர் அருகில் இருந்த கல்லூரியின் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கம் போல் கடந்த 21-ம் தேதி மாணவர் ஹர்ஷித் கோட்னாலா பேருந்தில் செல்லவில்லை எனவும், கல்லூரிக்கும் செல்லவில்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் அங்குள்ள சிசிவிடி காட்சிகளைப் பார்த்த போது, மாணவன் நடந்து விடுதியில் இருந்து வெளியே சென்றது பதிவாகியிருந்தது.

பின்னர் அவரது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், ஆனேக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளனர். இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவனை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை தெலகரஹள்ளி கிராமத்தில் உள்ள நீலகிரி தோப்பில் உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததுள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தது மாணவன் ஹர்ஷித் என்பதும், அவரை பெட்ரோல் ஊற்றி, மர்மநபர்கள் எரித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாணவனைக் கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மாணவன் விடுதியில் இருந்து வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.