அமைச்சர் துரைமுருகன் செல்வப் பெருந்தகை மோதல்! ஆழம் பார்க்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

 

மழை நீர்ப் பிடிப்பு அதிகரித்தால் தனது தொகுதிக்குட்பட்ட ஏரியை திறந்த போது தன்னிடம் தகவல் சொல்லவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வப்பெருந்தகை. அப்படி ஒன்றும் சொல்லத் தேவையில்லை என்று நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து இருந்தார். இது தன்க்கு நேர்ந்த பெரும் அவமானமாகக் கருதி மீண்டும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் செல்வப் பெருந்தகை. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரையே பழித்துப் பேசிவிட்டார் துரைமுருகன் என்ற கோணத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனையாக தோற்றமெடுத்துள்ளது.

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியிருந்த கருத்துக்கள் திமுகவை சீண்டும் விதமாக இருந்தது.மேலும் ராகுல் காந்தியுடன் விஜய் பேசினார் என்ற தகவல்களும் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணிக்கு செல்ல தயங்காது என்ற பேச்சுக்களும் திமுக கூட்டணியில் விரிசல் என்ற தோற்றத்தையும் உருவாக்குவதாக உள்ளது.

பாஜக இல்லாத அதிமுக அணிக்கு விஜய் கட்சி சென்ற் விட்டால் அது திமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக- அதிமுக அணிக்கு விஜய் சென்றால் திமுக அணியின் வெற்றி உறுதி என்றும் கூறப்படுகிறது. அதிமுக - விஜய் கூட்டணி உறுதி ஆக விடாமலும் கூட்டணி தொடர்பாக விஜய் யை எந்த முடிவும் எடுக்க விடாமல் செய்யவும் தான் காங்கிரஸ் - திமுக மோதல் என்ற கருத்து திட்டமிட்டே உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது தனக்கு கிடைக்கும் முதல் அரசியல் அங்கீகாரமாகக் கருதுகிறார் விஜய். அதுவே அவருடைய முதல் சாய்ஸ் ஆகவும் இருக்கிறது.

காங்கிரஸ் தங்கள் பக்கம் வரக்கூடும் என்ற நம்பிக்கையை விஜய்க்கு கொடுப்பதன் மூலம் பாஜக, அதிமுக பக்கம் அவர் சாயாமல் தடுக்க முடியுமல்லவா. இந்த அடிப்படையில் தான் டிடிவி தினகரனும் விஜய் தலைமையில் கூட்டணி என்று கூறி வருகிறார். விஜய் அதிமுக பக்கம் போய்விட்டால் திமுக அணியில் டிடிவிக்கும் ஓபிஎஸ்க்கும் இடம் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆக விஜய் தலைமையில் மீண்டும் ஒரு மக்கள் நலக் கூட்டணியை அமைப்பது தான் முதலமைச்சரின் திட்டமாக இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. மற்றபடி திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணி என்பது உறுதியாகத் தெரிகிறது.