அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.. பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு என்னாச்சு?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும் நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டறிந்து, பள்ளிக்கு வராமல் நின்று போன மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை அமைத்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் நாளை காலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ்-ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இதன்காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.