மதிமுக எம்பி கணேசமூர்த்தி காலமானார்.. கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!

 

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மதிமுக சார்பில் மூன்று முறை எம்பியாக இருந்த இவர், இந்த முறையும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், ஈரோடு தொகுதியை இந்த முறை திமுக எடுத்துக்கொண்டது. அதற்கு பதிலாக திருச்சியை ஒதுக்கியது. திருச்சியில், வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதனால் அப்செட் ஆன கணேசமூர்த்தி கடந்த 24-ம் தேதியன்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இதனால் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூா்த்தி இன்று அதிகாலை ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். சிகிச்சையில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவரது மறைவு மதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கணேசமூர்த்தி இருந்ததை அவரது நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தியைப் பார்க்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கணேசமூர்த்திக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறி, நல்ல பதவி பெற்றுத் தர திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை குமாரவலசுவைப் பூர்வீகமாகக் கொண்ட கணேசமூர்த்தி, 1978-ம் ஆண்டு திமுக மாணவரணி இணை அமைப்பாளர் பதவியில் தொடங்கி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1993-ல் மதிமுகவை வைகோ தொடங்கியபோது, அவருடன் சென்ற 9 மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியது தொடர்பான பொடா வழக்கில் வைகோவுடன் சேர்த்து கணேசமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.

2016-ம் ஆண்டு முதல், மதிமுகவின் பொருளாளர் பதவி வகித்து வந்துள்ளார். மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ள கணேசமூர்த்தி, பழனி தொகுதியில் ஒருமுறையும், ஈரோடு தொகுதியில் இரு முறையும் எம்பியாக தேர்வு பெற்றவர்.  இவருக்கு, கபிலன் என்ற மகனும், தமிழ்பிரியா என்ற மகளும் உள்ளனர். மனைவி பாலாமணி காலமாகி விட்டார்.