கல்லூரி விடுதியில் எம்பிஏ மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. திருப்பரங்குன்றத்தில் பெரும் அதிர்ச்சி!

 

திருப்பரங்குன்றத்தில் எம்பிஏ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் குலமங்கலம் அருகே உள்ள கீழபனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் செந்தூர் ராம் (21). இவர், திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் அருகில் உள்ள தனியார் மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

விடுதியில் தங்கி படித்த செந்தூர் ராம், நேற்று முன்தினம் இரவு ஆண்கள் தங்கும் விடுதியில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த சக மாணவர்கள் அவரை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் செந்தூர் ராம் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.