மலைக்கோவிலில் படியேறிய நபர் மூச்சுத்திணறி பலி.. சோளிங்கரில் அதிர்ச்சி சம்பவம்

 

சோளிங்கர் அருகே யோக நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மலையடிவாரத்தில் இருந்து 1,305 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். நரசிம்மர் யோக நிலையில் காட்சியளிப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இக்கோயிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.  இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கடந்த மார்ச் மாதம் ரோப் கார் சேவையைத் தொடங்கியது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வதற்காக இன்று வந்துள்ளார். பராமரிப்புப் பணி காரணமாக இன்று ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டதால், 1,305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு நடைபயணமாக புறப்பட்டுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் அவர் மலையேறிய நிலையில், 1,200-வது படியில் ஏறிவரும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் டோலி மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், பெங்களூரில் இருந்து வந்த முத்துக்குமாரின் உறவினர்கள், அவரது உடலை பெங்களூருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.