நானில்லாம என் மனைவி குழந்தை மிகவும் கஷ்டப்படுவார்கள்.. மனைவி, குழந்தையை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை!

 

தேனி அருகே மனஉளைச்சலில் இருந்தவர் மனைவி, குழந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (37). இவர் தேனியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு அசிதா என்ற மனைவியும், பிரித்திகா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் 4 மாதங்களாக சதீஸ்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் வீட்டிலும் பிரச்னை ஏற்பட மனஉளைச்சலில் இருந்தவர் மனைவி, குழந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே சதீஸ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, சதீஸ்குமாரால் எழுதப்பட்ட கடிதம் மற்றும் டைரியில் இறப்புக்கான காரணங்களை எழுதியுள்ளார்.

அதில், “எனக்கு வாழப்பிடிக்கவில்லை. நான் இறந்துவிட்டால் என் மனைவி குழந்தை மிகவும் கஷ்டப்படுவார்கள், எனவே அவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். என் விதி முடிந்துவிட்டது. தயவு செய்து என்னை எல்லோரும் மன்னித்துவிடுங்கள். ஐ லவ் யூ அசிதா, பிரித்திகா” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதுகலை பட்டதாரியான தன் காதல் மனைவி, டைரியில் சதீஸ்குமாருக்கு ஆலோசனை வழங்கி பல குறிப்புகளை எழுதியுள்ளார். அதற்கு சதீஸ்குமாரும் பதில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, “காதலித்து திருமணம் செய்துள்ளனர். குடும்பங்களுக்கு இடையேவும் பிரச்னைகள் இருந்துள்ளன. சதீஸ்குமாருக்கு கடன்பிரச்னைகளும் உள்ளன. இதனால் வீட்டில் தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் கூட அசிதாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து அறிவுரை கூறிச் சென்றிருக்கிறார்கள். அசிதாவின் தந்தை நாகராஜ் கொடுத்துள்ள புகாரில், மருமகனின் தேவையற்ற செயல் தான் ஒரு குடும்பமே அழிய காரணமாகிவிட்டது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.