மதுரை சித்திரை திருவிழா..  4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்

 

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதத்தில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதனிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 23-ம் தேதி நடக்கும் சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அனுமதி பெற்று ஏப்ரல் 23-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படாது என்றும், மாறாக அந்த தேர்வு ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும் என மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகளின்படி, 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1) யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024 ஆம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 ஆம் தேதிக்கும் நடைபெறும் என இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

தற்போது மதுரை மாவட்டத்தில் 23.04.2024 அன்று சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இயக்குநரின் அனுமதி பெற்று 23.04.2024 நடைபெறும் சமூக அறிவியல் தேர்வானது 24.04.2024 அன்று நடைபெறும் என அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.