500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்.. திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் திமுக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை நேற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கை வடிவமைப்பு குழு தலைவி கனிமொழி ஒப்படைத்தார்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு,

  • மாநிலங்கள் சுயாட்சி பெற அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
  • உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்
  • புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்
  • பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படாது
  • எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ஆக குறைக்கப்படும்
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
  • ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்
  • கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும்

  • புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்
  • நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்
  • ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்
  • காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்
  • அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு சமமான நிதி வழங்கப்படும்.
  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
  • ஒரேநாடு ஒரேதேர்தல் கைவிடப்படும்
  • வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்