தேர்வில் குறைந்த மதிப்பெண்.. கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 

கோவை அருகே தனியார் கல்லூரியில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தவர் கல்லூரி மாணவி பவித்ரா. இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கல்லூரி தேர்வில் மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு சில பாடங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த மாணவி பவித்ரா மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தன்னுடன் தங்கியுள்ள சக மாணவிகளிடம் கல்லூரிக்கு வர விருப்பம் இல்லை எனக் கூறி விடுப்பு விண்ணப்பத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். மாணவி பவித்ரா அனுமதி பெறாமல் விடுப்பு விண்ணத்தை அனுப்பியது குறித்து விடுதி காப்பாளரிடம், கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். 

இதனையடுத்து விடுதி காப்பாளர் மாணவி பவித்ராவின் அறைக்கு சென்று பார்த்த போது அவர், தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதிக்காப்பாளர், கல்லூரி நிர்வாகம் மூலம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் இந்த முடிவு சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.