புதுக்கோட்டை அருகே டீக்கடைக்குள் லாரி புகுந்து விபத்து.. 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 

புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன், கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு 22 ஐயப்ப பக்தர்கள் வேனில் சென்றுள்ளனர். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் என்ற ஊரில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். நமணசமுத்திரம் காவல் நிலையம் எதிரே உள்ள ஐயங்கார் டீ கடையில் ஐயப்ப பக்தர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை சேர்ந்த மணிகண்டன் என்பவர் லாரியை ஓட்டிவந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேநீர் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்த இரண்டு வேன், கார் மீதும் பயங்கரமாக மோதியது. மேலும் அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி (55), ஜெகனாதன் (60), மதுரவாயலைச் சேர்ந்த சுரேஷ் (34),‌ சென்னையைச் சேர்ந்த சதீஷ் (25), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (26) ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக லாரி மோதியதில் லாரிக்கு அடியில் 4 பேர் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினரும் போலீசாரும் நீண்ட நேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிய நான்கு பேரின் சடலத்தை ஜேசிபி, கிரேன், மரம் வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் வெளியே எடுத்தனர்.

ஐந்து பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 3 வயது சிறுமி உட்பட 19 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து, பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்த சிமெண்ட் லாரி ஓட்டுனர் மணிகண்டன் (39) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேலும் நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.