கடந்த ஆண்டு சென்னையில் 499 விபத்துகள்.. 504 பேர் பலி.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த 499 விபத்துகளில் 504 பேர் உயிரிழந்தனர் என போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கான சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மற்றும் கோவையில் 3,642 விபத்துகள் நடந்த நிலையில், கோவையில் 1,040 பேரும், சென்னையில் 504 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கோவையை விட சென்னேயில் அவசர சிகிச்சை விரைவாக கிடைப்பதால், இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கோவை புறநகர் பகுதிகளில் அதிக விபத்துகள் நடப்பதும், அங்கு அவசர சிகிச்சை வசதி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,387 விபத்துகளில் 912 பேரும், திருப்பூரில் 3,292 விபத்துகளில் 861 பேரும், சேலத்தில் 3,174 விபத்துகளில் 787 பேரும், கடலூரில் 3,094 விபத்துகளில் 580 பேரும், மதுரை மாவட்டத்தில் 2,642 விபத்துகளில் 876 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் திருவள்ளூரில் 2,590 விபத்துகளில் 716 பேரும், விழுப்புரத்தில் 2,585 விபத்துகளில் 548 பேரும், திருச்சியில் 2,416 விபத்துகளில் 720 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2022-ல் 64,105 விபத்துகளில் 17,844 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ல் 66,841 விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.