கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம்.. முன்னாள் நாதக நிர்வாகி மரணம்; அவரது தந்தையும் உயிரிழப்பு

 

கிருஷ்ணகிரி பாலியல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள கந்திகுப்பத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை என்சிசி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அப்போது, என்சிசி மாஸ்டராக வந்திருந்த சிவா என்கிற சிவராமன், 8-ம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாதக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பிலிருந்த சிவராமன், அந்தக் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பு அளித்த புகாரின் பேரில், சிவராமன், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், ஆசிரியைகள் கோமதி, ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் சத்யா, சிந்து, சுப்பிரமணியம், சக்திவேல் உள்ளிட்ட 11 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதில், முக்கிய குற்றவாளியான சிவராமன் கோவையில் பிடிபட்டார். தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதில் சிவராமனுக்கு வலது காலில் எலும்பு முறியும் அளவுக்குக் காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிவராமன் இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். அதே நேரம், சிவராமனின் தந்தை அசோக்குமாரும் காவேரிப்பட்டணம் பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு, நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.

முக்கிய குற்றவாளியே உயிரிழந்து விட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்லப்படும் என்ற பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. சிவராமன்மீது ஏற்கெனவே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன. காதல் திருமணம் செய்த சிவராமனுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் இவருடைய தவறான நடவடிக்கைகளால் சிவராமனின் மனைவியும் பெண் குழந்தையும் அவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். 

இந்த நிலையில், என்சிசி பயிற்சியாளர் என்ற போர்வையில் தனியார் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பர்கூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் நேற்று பதிவானதும் குறிப்பிடத்தக்கது.