மகனுக்கு கல்தா.. மகளுக்குப் பதவி? டாக்டர் ராமதாஸ் எடுக்கப்போகும் புதிய முடிவு!!

 

தானோ தன்னுடைய குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட்டால் சவுக்கால் அடியுங்கள் என்ற அறைகூவலுடன் கட்சியைத் தொடங்கியவர் டாக்டர் ராமதாஸ். பின்னர் அவருடைய மகன் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சராகவும் பதவி வகித்தார். கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்பா - மகன் பிரச்சனையால் பாமக இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில்,  அன்புமணிக்கு எதிராக டாக்டர்.ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவில் 16 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. பதில் அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, டாக்டர். ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் அன்புமணி பதில் அளிக்காதது குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனதெரிகிறது.

மேலும் நாளை பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதன்பின் 3ம் தேதி மாநில தலைமை நிர்வாக குழு கூடுகிறது. இந்த கூட்டங்களில் அன்புமணி செயல்பாடு குறித்து விவாதித்து, ஒழுங்கு நடவடிக்கை குழு அவர் மீது எடுக்க உள்ள நடவடிக்கைகளை விளக்கி ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.

முதல்கட்டமாக பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படலாம் எனவும், அந்த இடத்துக்கு ராமதாசின் மூத்த மகள் காந்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பெண்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கூறிய டாக்டர். ராமதாஸ் தனது மகளையே கட்சியின் செயல் தலைவராக நியமிக்கும் நிலைக்குச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது