12 வருடங்கள் ஆயிடுச்சி.. இதோ நான் வந்துட்டேன்.. பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்!

 

12 ஆண்டுகளுக்குப் பிறகு, நீலகிரி மலைப்பகுதி முழுவதும் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். 

குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பரவலாக வளரும் ஒரு  வகை செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால் தென்னிந்தியாவில் இம்மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மலைத்தொடரில் நீலக்குறிஞ்சிகள் அதிகளவு பூப்பதால் நீலகிரி மலை என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. 

இவ்வகை குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இக்குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக் குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக் கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடு களில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்திய நாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. 

குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு  தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர் கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை வகுப் பில் மலையும் மலை சார்ந்த நிலமும் ‘குறிஞ்சி’ திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பைக் காட்டுகின்றன. இவ்வகை நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகள் 30 முதல் 60 செமீ உயரம் வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோவில் மணிகளின் உருவம் கொண்டவை.