பாஜகவுடன் கூட்டணி வைத்தது மருமகள் தான்.. டாக்டர் ராமதாஸ் ஆவேசம்!!

 

பாமக நிறுவனத் தலைவர் டாக்டர்.ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பு வட தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் நடக்கும் சீனியர் - ஜூனியர் மோதல் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள்  மத்தியிலும் எதிரொலித்துள்ளது. மூத்தவர்கள் டாக்டர்.ராமதாஸுக்கு ஆதரவாகவும் இளையவர்கள் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாகவும் பிரிந்துள்ளனர். கிட்டத்தட்ட கட்சி செங்குத்தாக பிளவு பட்டு நிற்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி பேரம் பேசி முடித்தது அன்புமணியின் மனைவி சவுமியா தான் என்று டாக்டர்.ராமதாஸ் கூறியுள்ளது, கட்சிநிர்வாகம்  அன்புமணி தலைமையில் இல்லாமல் அவருடைய மனைவியின திட்டப்படி தான் நடக்கிறது என்ற உண்மையும் வெளிப்பட்டுள்ளது.

டாக்டர் ராமதாஸ் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முதன் முறையாக கூறியுள்ளார்.

“024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார்.

எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்.

தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டுமானால், பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என்று அன்புமணி கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். தேவைப்பட்டால் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, அன்புமணியை நீக்கவும் என்னால் முடியும்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் டாக்டர்.ராமதாஸ்.

டாக்டர்.ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவாகவும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பாமக இரண்டு கட்சிகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.