விஜய் யின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டதா ?இழுத்து மூடப்படுமா தமிழக வெற்றிக் கழகம்?
ஒரு அரசியல் தலைவர் பங்கேற்ற பரப்புரை நிகழ்வில் 39 பேர் உயிரிழந்து இருப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல் தடவை ஆகும். உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்கள் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக விமானம், கார் மூலம் கரூர் சென்றடைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது விஜய் யின் மூன்றாவது வாரமாக நடைபெற்ற 6 வது பிரச்சாரக் கூட்டம். ஊரின் மத்தியில் பிரபல நடிகருக்கு அனுமதி தருவது குறித்து ஏற்கனவே பல அதிருப்திகள் எழுந்தது. நீதிமன்றம் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு இரவு 7:30 மணிக்கு மேல் தான் விஜய் வந்துள்ளார். 12 மணி முதலாகவே கூட்டம் திரண்டு உள்ளது. குடிநீர் வசதி உள்பட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.
வெயிலில் நின்றவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கமடையும் நிலை ஏற்படுவது இயல்பானது. இத்தகைய கூட்டத்தில் ஒரிருவர் மயக்கமுற்றாலும் மற்றவர்கள் அவர்கள் மீது ஏறிச்செல்லும் அபாயமே உள்ளது. அரசு அனுமதித்த நேரத்திற்குப் பிறகே வந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது 10 ஆயிரம் பேருக்குத் தான் அனுமதி என்ற நிலையில் 27 ஆயிரம் பேர் கூடிவிட்டனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் காட்டமாக விமர்சித்த இந்தக் கூட்டத்தில் தான் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஓடோடி வந்த முதலமைச்சர் அரசியல் ரீதியான பதில் எதுவும் சொல்லப் போவதில்லை. தனி நபர் ஆணையம் நடத்தும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் யின் பஸ் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது. நீதிமன்றமும் கடும் நிபந்தனைகளை விதிக்கும். இனிமேல் மக்கள் நடமாட்டம் இல்லாத பொதுவெளியில் பொதுக்கூட்டம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, மக்கள் மத்தியில் மீண்டும் விஜய் வந்தால், எதிர்வினை எப்படி இருக்கும் என்றும் கூற இயலாது.
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளுக்கு அரசு மீது குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ள முடியாது.அடுத்த சில மாதங்களுக்காவது விஜய் தன்னுடய அரசியல் பயணங்களை தவிர்க்க வேண்டிய நிலை வரும். தேர்தல் நேரத்தில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் மக்களைச் சந்திக்க முடியும்.
தனி நபர் ஆணையம் விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டால் அதில் விஜய் தரப்புக்கு பாதகமான தகவல்கள் இருந்தால் மேலும் சிக்கலாகி விடும். இந்த துயர சம்பவம் நடிகர் விஜய் யை மீண்டும் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி ஆக்கிவிடும் என்றே தெரிகிறது.
உண்மையிலேயே இந்த சம்பவம் விஜய் யின் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருந்தால், அவராகவே ஒரு முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் யின் அரசியல் பயணத்தில் இந்த துயரச் சம்பவம் ஒரு பெரும் தடங்கல் என்பதே உண்மையாகும்.