கேந்திரிய வித்யாலயாவில் புதிய கல்விக் கொள்கை பின்பற்றப்படுகிறதா? தயாநிதி மாறன் கேள்விக்கு கிடைத்த பதில் என்ன?
தமிழ்நாட்டில் 45 ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆசிரியர்கள் நியமனத்தில் சமநிலை உள்ளதா என பல்வேறு கேள்விகளை மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் அளித்துள்ள பதிலில், "தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்,24 பள்ளிகளில் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது. மீதமுள்ள 21 பள்ளிகளில் தமிழ்ப் பாடங்கள் தமிழ்நாடுஅரசின் தன்னாட்சி அமைப்பான Tamil Virtual Academy (TVA) மூலம் கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் PM SHRI கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 69 இந்தி ஆசிரியர்கள்,50 சமஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் ஆசிரியர்கள் 34 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் (contract basis) நியமிக்கப்படுகின்றனர். நிரந்தர மொழி ஆசிரியர் பணியிடங்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 1253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் 45 கே.வி. பள்ளிகளும் அடங்கும். இந்திய அரசால் கேந்திரிய வித்யாலயா சங்கத்திற்குக் ஒதுக்கப்படும் நிதிகள், "Grant-in-Aid-Salaries", "Grant-in-Aid-General", மற்றும் "Grant for Creation of Capital Assets" என்ற தலைப்புகளில் வழங்கப்படுகின்றன.
ஆனால், மாநில/ யூனியன்பிரதேசம்/ மாவட்டம்/ தனிப்பட்ட கேந்திரிய வித்யாலயா அளவில் தனியாக வழங்கப்பட்ட நிதியின் தரவுகள் இல்லை. இந்தப் பள்ளிகளில் முதன்மையாக இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா கல்விக் குறியீட்டின் 112வது பிரிவின்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே உள்ளூர்/ பிராந்திய மொழியில் பாடங்கள் நடத்தப்பட கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்போதுகூட கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் துணை ஆணையர் அனுமதி பெற்ற பிறகு, ஒரு பகுதி நேர ஒப்பந்த ஆசிரியர் தான் (part-time contractual teacher) நியமிக்கப்படுவர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் பதிலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தயாநிதி மாறன், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.