தவெக கட்சியை வளைக்கப் பார்க்கிறதா பாஜக? விஜயகாந்த் போல் தப்பு பண்ணாதீங்க விஜய்..!!

 

கரூர் பெருந்துயரத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரவில்லை. ஆனால் அந்த துயரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டு விஜய் கட்சியை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலை வேகமாக நடந்து வருகிறது. விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து விட வேண்டும். அவர்கள் விஜய்க்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு முன்னதாகவே பாஜகவின் தீவிர ஆதரவாளர் கோலகல ஸ்ரீனிவாஸ் வெளிப்படையாக அறிவித்தார்.

பனையூர் வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வந்த விஜய் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதை குருமூர்த்தி உடனடியாக மறுத்திருப்பது, சந்திப்பை உறுதிபடுத்துவதாகத் தான் உள்ளது. நேரடி சந்திப்பு இல்லை என்றாலும் இடையில் ஒருவருடைய தொலைபேசி மூலமாகவாவது பேச்சுவார்த்தை நடந்திருக்க வாய்ப்புள்ளது. பாஜகவும் அதிமுகவும் முந்திக்கொண்டு விஜய் க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறார்கள்.

எந்தக் கொள்கையும் இல்லாமல் கண்மூடித்தனமாக விஜய் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்காக மட்டுமே எதையும் செய்யத் துடிக்கும் வெறித்தனமான இளைஞர்கள் பட்டாளம் தான் தவெக என்னும் கட்சியின் அடித்தளம். ஒரு வகையில் இந்த ரசிகர்களே விஜய் யின் அரசியலுக்கு இடைஞ்சலாகவும் இருந்து வருகிறார்கள். தவிர அரசியல் புரிதல் இல்லாத இளைஞர்களும் பெண்களும் விஜய் வந்து தான் பார்க்கட்டுமே என்ற மன நிலையில் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் 4 முனைப் போட்டி உறுதியாக உள்ளது. 

விஜய் கட்சியையும் பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால் எளிதாக திமுகவை தோற்கடித்து விடலாம் என்பது தான் பாஜகவின் திட்டம். பாசிச பாஜக என்று நாள் தோறும் திட்டி விட்டு கூட்டணி வைத்தால் அரசியல் புரிதல் இல்லாத இளைஞர்கள், பெண்கள் வாக்குகள் விஜய் க்கு கிடைக்காதே? ஆனாலும்  வெறித்தனமான விஜய் ரசிகர்கள் கூட்டம் மட்டுமே புதிய கூட்டணியின் வெற்றிக்குப் போதும் என்று கணக்கு போடுகிறார்கள் போலும். திமுக தங்கள் கட்சியை ஒழிக்கப் பார்க்கிறது என்ற ஒற்றை வாசகம் மூலம் பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கான காரணத்தை தயார் படுத்தி விடலாம் என்பது தான் கூட்டணிக் கணக்காகத் தெரிகிறது.

கும்பமேளா கூட்டத்தில் இறந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று சொன்ன ஹேமாமாலினியின் தலைமையில் கரூருக்கு ஒரு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்துள்ளது பாஜக. தனியாக இருந்தால் திமுக உங்களை ஒழித்து விடும், கூட்டணிக்குள் வந்து விடுங்கள் என்பது தான் பாஜகவின் செயல்பாடுகளாகத் தெரிகிறது. தன்னுடைய வீடியோவில் இறந்தவர்களுக்காக வருத்தம் கூட தெரிவிக்காத விஜய், தங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். இதுவே பாஜகவின் அழைப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் சொல்லும் அறிகுறியாகத் தான் தெரிகிறது.

பாசிச பாஜக என்று மூச்சுக்கொரு தடவை சொன்னவர் அதே பாஜகவுடன் கூட்டணி வைத்தால், திமுக தோற்கடிக்கப்படுமோ என்னவோ ஆனால் விஜய் யின் அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துவிடும் என்பதற்கு விஜயகாந்த் எடுத்த முடிவுகளே சாட்சி.. தனியாக நின்று 11 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த், ஊழல்வாதி என்று குற்றம் சாட்டிவிட்டு அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போதே தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை மொத்தமாக அடகு வைத்து விட்டார். உடனடி பலனாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியைப் பெற முடிந்த விஜயகாந்த் அடுத்தடுத்த தேர்தல்களில் பெரும் தோல்வியைத் தழுவியதுடன் அவருடைய கட்சியும் கரைந்து விட்டது.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்பார்கள். இன்றைய சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வம்படியாக மோதல் போக்கை காட்டாமல். அவரை  நேரடியாக சந்தித்து கரூர் துயர நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். முதலமைச்சர் மோதல் போக்கை விரும்பவில்லை என்பதை அவருடைய தொடர் செயல்பாடுகள் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அதையே தனக்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் விஜய்.

வெறித்தனமான தன்னுடைய கட்சிக்காரர்களின் செயல்பாடுகளையும் முறைப்படுத்தி, இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, அரசியல் அனுபவமிக்கவர்களை உடன் சேர்த்து திமுக, பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து தேர்தலை சந்திக்கலாம்.

கரூர் நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்டவர்கள் சிலர் மீது சட்டப்படி நடவடிக்கையை தவிர்க்க முடியாது என்றாலும் விஜய் யின் அரசியல் எதிர்காலம் நீடித்து இருக்கும். 2026 ல் இல்லையென்றாலும். அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாடு விஜய் க்கு வாய்ப்பளிக்கவும் செய்யலாம்.

-ஸ்கார்ப்பியன்