ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம்  ஒரு கோடியே 13 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டது. இதன் பேரில் ரேஷன் கடை பணியாளர்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாங்கினர்.

இந்த நிலையில், களப்பணியாற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் என கணக்கிட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ரேஷன் கடை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.