மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

 

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. 

இந்த நிலையில், மாணவர்கள் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியின் மூலமாகவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வுகள் 19-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை 26.05.2023 (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரும் மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேற்வெழுதிய தேர்வு மையங்களிலும் 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டல் கோரும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Eervice Centres) வாயிலாகவும் 23.05.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் 27.05.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நாட்களில் விண்ணப்பிக்கத்தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05.2023 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 31.05.2023 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500, மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1,000 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.