பள்ளி மாணவிக்கு சட்ட விரோத கருக்கலைப்பு.. டாக்டர் கைது

 

கூடலூரில் பள்ளி மாணவிக்கு சட்ட விரோத கருகலைப்பு செய்ததாக மருத்துவரை போலீசார் கைது செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கர்ப்பிணியாக இருந்தார். அவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துக்கடை ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார். ஆனால் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் மீட்டு, அருகில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சிறுமி என்பதால் கூடலூர் போலீசாருக்கு மருத்தவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தது. தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாணவியின் உடல் நிலை மேலும் மோசமானது. உடனே அவர், ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை அறிந்ததும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில் மருத்துவ பணி துணை இயக்குனர் பரமேஸ்வரி தலைமையில் மருந்து ஆய்வாளர் பாலாஜி, கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது கூடலூரை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் அகமது அன்சாப், கர்நாடகாவில் இருந்து விதிகளை மீறி கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி மாணவிக்கு விற்றது தெரியவந்தது. உடனே அந்த மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கருக்கலைப்பு மாத்திரைக்கு பரிந்துரைத்த மருத்துவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளி மாணவிக்கு சட்ட விரோத கருகலைப்பு செய்ததாக நரேந்திர பாபு என்ற மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளியில் சுற்றுலா சென்ற போது சக வகுப்பு மாணவருடன் தனிமையில் இருந்த மாணவி கர்ப்பமாகி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர், மாணவி இருவர் மீதும் போக்சாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.