மின்சார கம்பியை பிடித்து கணவன் - மனைவி தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீதம்!

 

வேதாரண்யம் அருகே மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குமரேசன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி (28). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. 

வீட்டின் தரைதளத்தில் தந்தை மாசிலாமணியும், முதல் தளத்தில் மகன் குமரேசனும் வசித்துள்ளனர். கரியாபட்டினம் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வந்த குமரேசன், கடன் சுமையால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற குமரேசன், மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பியை பிடித்தார். மின்சாரம் பாய்ந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த புவனேஸ்வரி, கணவனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரியாப்பட்டினம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.